படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Wednesday, March 25, 2009

நாகரிக கோமாளி சாரு

சாரு தன்னுடைய வலைதளத்தில் Kim ki duk இயக்கிய The Isle படத்தை பற்றி சிலாகித்து எழுதி, கமலஹாசன் இது போன்ற படங்களை எடுக்க முன்வராமல் தசவதாரம் போன்ற குப்பை படங்களையே எடுத்து வருகிறார் என்று சாடியுள்ளார். கமல் குப்பை படங்களை எடுக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். இப்பொழுது அவர் நிஜமாகவே இந்த படத்தை பார்த்தாரா இல்லை IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.

சாருவின் முதல் கண்டுபிடிப்பு, நாயகிக்கு பேச வராதாம். //ஹீ ஜின்னுக்குப் பேச வராது. சைகையாலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. (மொழி, ஜோதிகா எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விடுங்கள்).//

இந்த கொடுமையை என்னவென்று சொல்ல, ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள். அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள். இந்த காட்சியெல்லாம் உலக படங்களை அலசும் சாருவிற்கு கண்களுக்கு மட்டும் தெரியவில்லை போலிருக்கு. இவருடைய பிதாமகன் விமர்சணத்தையும் பார்க்கனும், யாருக்கு தெரியும், விக்ரமையும் ஊமைனு சொன்னாலும் சொல்லியிருப்பார். இந்த அழகுல நாங்க மொழி ஜோதிகாவை சுத்தமா மறந்துடனுமாம்.

அப்புறம் ஹ்யூன் ஹ்யூன் தற்கொலை முயற்சி, //படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.// இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல. போலிஸ் ஒவ்வொரு படகு இல்லத்திலும் சோதணை நடத்துவதை பார்த்து அடுத்து தன்னிடம் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன், இவர்களிடம் அகப்பட்டு அல்லல் படுவதை விட தற்கொலை செய்து விடலாம் என முடிவு செய்து, உடனடியாக தற்கொலை செய்ய வேறு எந்த உபகர்ணமும் நேரமும் இல்லாதால் வேறு வழியின்றி, மீன் தூண்டிலை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். கதை இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்று உலக மகா விமர்சகர் எழுதலாமா?

அடுத்த அபத்தம், ஹீ ஜின்னை எதோ சீரியல் கில்லர் போல் இவர் கூறியிருப்பது. //பொறாமை கொள்ளும் ஹீ ஜின், அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு ஹ்யூன் ஷிக்குடன் நெருங்கிப் பழகுகிறாள்// ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள். அடுத்த நாள் காலை அவளை விடுவிப்பதற்காக அவள் அந்த படகு வீட்டிற்கு போகயில் தான் அவளுடைய உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பாள். அதற்கு பின் அவளுடைய உடலை அவள் ஸ்கூட்டரோடு சேர்த்து கட்டி தண்ணீரில் முழ்கடித்து விடுவாள்.

கதை இப்படி இருக்க, அவர் பாட்டுக்கு அளந்து விட்டிருக்கிறார், எவன் இந்த படத்தையெல்லாம் பார்த்துட்டு கேள்வி கேட்க போறான்னு. இந்த லட்சனத்துல கமலுக்கு அட்வைஸ் வேற. கமல் இந்த மாதிரி படங்களின் ஒவ்வொரு Frameயையும் விரல் இடுக்கில் வைத்திருப்பார். சாருவின் இந்த பதிவையெல்லாம் அவர் படித்தால் வாயில சிரிக்க மாட்டார்.

இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன.

அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார். இதையெல்லாம் குறிப்பிட அவருக்கு தோனவில்லை. அவருக்கு படத்தில் வரும் செக்ஸ், வன்முறை,மிருக வதைகளை பற்றி மட்டும் எழுதி, என்னை வாசிப்பவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் எழுதினால் போதும்னு நினைச்சுட்டார் போல.

இளையராஜாவை பற்றி இவரது விமர்சணத்தை படித்தாலே, இவருக்கு சினிமாவும், இசையும் எவ்வளவு தெரியும் என்பது விளங்கும்.

கொரியா படம் இரானிய திரைப்படத்தை பற்றி விமர்சித்தால் தன்னை எல்லாரும் மேதாவி என நினைப்பார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எழுதுவது மாலை முரசிலோ இல்லை தினத்தந்தியிலோ இல்லை. Kim ki duk கை தமிழ் திரையுலகோடு ஒப்பிடும் உங்களை, நாங்கள் English/Latin/French/பாரதி போன்ற எழுத்தார்களை உங்களுடன் ஒப்பிட்டால்(அட ஒரு பேச்சுக்கு தாங்க) அது சரியாகுமா? உங்களுக்கு எது வருமோ அல்லது எது முடியுமோ அதை தான் நீங்கள் எழுத முடியும், அதே போல் தான் தமிழ் திரையுலகமும்.

சரி இப்போ இது போன்ற படங்களை கமல் போன்றவர்கள் தமிழ் நாட்டில் எடுக்க முன்வராதது ஏன் பார்ப்போம். சாருவே கூறியிருப்பது போல, இந்த ஜென்மத்தில் இது போன்ற படங்கள் தமிழில் வர வாய்ப்பே இல்லை. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த்தால் எத்தனை காட்சிகள் சென்சாரின் கத்திரியில் இருந்து தேறும். அப்படியே தப்பி தவறி படம் வெளிவந்தாலும் அவ்வளவு தான். ஏஸி காரில் பவனி வரும் மாதர் சங்கம் தான் முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். நாயகியை விபச்சாரம் செய்யவதாகவும், பெண்களை கூட்டி கொடுப்பதாகவும் காட்டி நம் நாட்டு பெண்களை இயக்குனர் இழிவு படுத்திவிட்டார் என்று காட்டு கூச்சல் போடுவார்கள். இந்தியாவில் தான் விபச்சாரம், கள்ள தொடர்பு எல்லாம் கிடையவே கிடையாதே.

அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். இம்சை அரசனில் வடிவேலு குதிரையில் ஏறி வலம் வந்ததையே எதிர்க்கும் இவர்கள் இதையா விட்டு வைப்பார்கள்.

பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, மற்றவர்கள் அதை படத்திலோ, நிஜத்திலோ செய்ய கூடாதுன்னு ரோட்டோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.

இது போக வேலையத்தவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.

இந்த லட்சனத்தில் இது போன்ற உலக படத்தை எப்படி எடுத்து வெளியிடுவது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது வேறு பிரச்சனை, முதலில் அது தமிழ்நாட்டில் வெளிவரனும்ல.

தமிழ் திரையுலகம் இப்பொழுது Transition period இல் இருக்கிறது. The Isle படத்தின் பட்ஜெட் வில்லு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசி கூட இருக்காது. கமலஹாசனும் இது போன்ற பல படங்களை படங்களை பார்த்திருப்பார், ஆனால் இது போன்ற படங்களை எடுக்கும் சூழல் இங்கே கிடையாது. நினைத்தை எல்லாம் இங்கே படமாக்க முடியாது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போவதற்கு முன்னால் தமிழ் ரசிகர்களை அதற்கு தயார் படுத்த வேண்டியிருக்கிறது. அதை தான் கமலஹாசன், பாலா, பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் ரசனை மாறாமல் இருக்கும் வரை இங்கே இது போன்ற படங்கள் மட்டுமே வெளிவரும். அதற்காக இங்கெ உள்ளவர்களுக்கு உலக தரத்தில் படம் எடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.

சந்தியா ராகம் படத்தின் நெகட்டீவ் அழிந்து விட்டது என்று கூறி அழுத பாலு மகேந்திரனின் நிலை தான் இன்றைய யதார்த்தம்.

IMDB தரத்தில் முதலிடத்தில் உள்ள Shawashank Redemption கூட தோல்வி படம் தான். அங்கே தயராகும் அர்னால்ட், சில்வெஸ்டர் படங்களுக்கும் இங்க தயாரிக்க படும் ரஜினி படங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும் நாட்டில் தான் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகானத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.

உலக படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் சாருவிற்கே கதை புரியவில்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி புரியும். தமிழ் படமோ, கொரியா படமோ மொதல்ல படத்தை பார்த்துட்டு விமர்சணம் எழுதுங்கப்பா.

Please excuse for any grammer mistakes in this post.

Labels: